Monday, 4 May 2020


மணம் வீசும் ஏலக்காய்

   ஏலக்காய் நாம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்று. இவ்வுலகில் நான்காயிரம் வருடங்களுக்கு மேலாக ஏலக்காய் பயன்பாட்டில் உள்ளது. நமது இந்தியா தான் ஏலக்காயின் பூர்வீகம் ஆகும். இந்தியாவில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஏலக்காய் அதிகமாக பயிரிடப்படும் மாநிலங்கள் ஆகும். உலக அளவில் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், தாய்லாந்து, தான்சானியா, வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகள் ஏலக்காய் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நாடுகள். இந்தியாவில் சைவ, அசைவ உணவுகள், பாரம்பரிய இனிப்பு வகைகள், தேனீர் முதலியவற்றில் ஏலக்காய் பயன்பாடு மிக அதிகம். பழங்காலத்தில் ஏலக்காயை நறுமணத்திற்காக மட்டுமல்லாமல் அது தரும் மருத்துவ பயன்பாட்டிற்காகவும் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர்.




      ஏலக்காயை எதாவது ஒரு வழியில் உணவில் எடுத்துக் கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். அஜீரணக் கோளாறுகளை சரி பண்ணி செரிமானத்திற்கு உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நமது உடலில் தங்கியுள்ள கொழுப்பைக்  கரைக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்க ஏலக்காய் உதவுகிறது. ஏலக்காயை தேனீரில் கலந்து குடிப்பதனால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். ஏலக்காய் இருமல் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றை தடுக்கிறது. நமது வாயில் உள்ள மோசமான கிருமிகளை போக்குவதில் ஏலக்காய் முக்கிய பங்கு ஆற்றுகிறது. புற்று நோய் செல்களை தடுத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.

   இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் ஏலக்காய் பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை நமது உணவுக் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. நம்மால் மறக்க முடியாத நமது பாரம்பரிய இனிப்பு வகைகள் அனைத்திலும் ஏலக்காய் தவறாது இடம் பெற்றிருக்கும். மிகச் சிறப்பானவற்றை தேடிப்பிடித்து உணவுப் பழக்கத்தில் சேர்ப்பது நமது முன்னோர்களின் வாடிக்கை ஆகும். அதனால் தான் ஏலக்காயும், நமது முன்னோர்களைப் போல பல ஆயிரம் வருடங்கள் கடந்தும், நம்முடைய உணவுப் பழக்கத்திலும், பாரம்பரிய இனிப்பு வகைகளிலும் மணம் வீசி நமக்கு ஏராளமான நன்மைகளைக் கொடுக்கின்றது.


தவிர்க்க முடியாத சிறுதானியம் கேழ்வரகு

     நாம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட சிறுதானியம் கேழ்வரகு ஆகும். இதை தெலுங்கில் ராகி என்றும், தென் தமிழ்நாட்டில் கேப்பை என்றும் அழைப்பார்கள். கேழ்வரகு தென்னிந்தியாவில் தோன்றியது என்றும், ஆப்பிரிக்கா மற்றும் எத்தியோப்பியாவில் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது மக்களின் அன்றாட வாழ்வில் மிக நெருக்கமான சிறுதானியம் கேழ்வரகு ஆகும். மக்கள் இதை கேழ்வரகுக்  கூழ், கேழ்வரகுக்  களி, கேழ்வரகு தோசை, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு பலகாரங்கள் என்று பல வழிகளில் சாப்பிடுகின்றனர். இந்தியாவில் தமிழகமும், கர்நாடகாவும் கேழ்வரகு அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலங்கள். கேழ்வரகு மனிதர்களுக்கு அளவற்ற ஆரோக்கிய பயன்களைத் தருகிறது.



     கேழ்வரகு வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. தமிழகத்தில் வெயில் காலங்களில் கேழ்வரகுக் கூழ் விற்கும்  தள்ளு வண்டி கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று கேழ்வரகுக் கூழை குடிப்பதை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். நம் தாத்தா பாட்டி காலத்தில் கிராமங்களில் மதிய வேளையில் கேழ்வரகுக் கூழை அதிகமாக குடிப்பார்கள். இதனால் அவர்கள் 80, 90 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். கேழ்வரகு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கேழ்வரகில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு இதை நாம் கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கேழ்வரகு நார்ச்சத்து அதிகமாக இருக்கும் சிறுதானியம் ஆகும். கெட்ட கொழுப்புகளை  கரைத்து உடல் எடையை சீராக வைப்பதற்கு உதவுகிறது. கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலிமை பெறவும் உதவுகிறது. நமது உடலில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

  கேழ்வரகில் அளவற்ற சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளதால் நமது முன்னோர்களின் வாழ்விலும், இன்றைய தலைமுறையிலும் அது தவிர்க்க முடியாத சிறுதானியமாக திகழ்ந்து நமக்கு நிறைய நன்மைகளைக் கொடுத்து ஆரோக்கியத்தை காத்து கொண்டிருக்கிறது.


Thursday, 16 April 2020

நலம் தரும் எள்ளு 

        எள் என்ற வார்த்தையே வழக்குச் சொல்லாக எள்ளு என்று அழைக்கப்படுகிறது. எள்ளு தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. இது சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடைய தானிய விதை அகும். எள்ளு பெரும்பாலும் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டது. இதில் அனைவராலும் பரவலாக அறியப்படுவது கருப்பு எள்ளு ஆகும். இந்தியா, மியான்மர், தான்சானியா, சூடான் போன்ற நாடுகளில் எள்ளு அதிகம் பயிரிடப்படுகிறது. எள்ளால் செய்த பலகாரங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை மற்றும் கோவை போன்ற ஊர்களில் எள்ளால் செய்த பலகாரங்கள் உற்பத்தி நடைபெறுகின்றது. தமிழர்கள் அனைவரும் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் நல்லெண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். தமிழ்க்  கலாசாரத்தில் பெரும்பாலான வீடுகளில் தலைக்கும், உடம்பிற்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது. இதன் மூலம் எள்ளு நமது வாழ்வில் பலகாரங்களாக, எண்ணெயாக பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.




             எள்ளின் மருத்துவ பயன்கள் ஏராளமானது. கல்லீரலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை சுத்தம் செய்கிறது. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் எள்ளை தொடர்ந்து சாப்பிட்டால் அந்தக் கோளாறு நீங்கும். எள்ளு புற்று நோய் செல்களை வளர விடாமல் பார்த்து கொள்கிறது. அதனால் குடல் புற்று, கல்லீரல் புற்று வராமல் தடுக்கப்படுகிறது. எள்ளில் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் பி, ஈ மற்றும் இரும்புச் சத்தும் ஏராளமாக உள்ளது. இதனால் பழங்காலத்தில் வீடுகளில் எள்ளால் செய்த பலகாரங்களை தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அதனால் இதை சாப்பிடும் குழந்தைகள் அனைவரும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். எள்ளின் பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மணம் வீசும் எள்ளால் செய்த பலகாரங்கள் அனைத்தும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும்  மிக பிடித்தமான ஒன்றாகும்.

       இவ்வளவு மருத்துவ குணங்கள் எள்ளில் நிறைந்துள்ளதால் நமது முன்னோர்கள் அதை பலகாரங்களாக, எள்ளுருண்டையாக, இனிப்பு வகைகளாக, எண்ணெய்யாக  தமது வாழ்வில் தொடர்ச்சியாக அதை பயன்படுத்தியிருக்கின்றனர். இன்றைய தலைமுறையினர் நமது முன்னோர்களின் உணவுப் பழக்கங்களையும், பலகார வகைகளையும் அறிந்து அவர்களைப் பின்பற்ற நினைப்பது நாம் அனைவரும் பெருமைப்படத்தக்க விஷயமாகும்.


சிறுதானியங்களின் அரசன் கம்பு 

 கம்பு சிறுதானியங்களில் அதிகமாக பயிரிடப்படுவது ஆகும். தமிழகத்திலும், இந்திய அளவிலும் மக்களால்  அதிகமாக அறியப்பட்ட சிறுதானியம் ஆகும். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு பயிரிடப்படுகிறது. நமது இந்திய மக்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கம்பு உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெயில் அதிகமாக உள்ள காலங்களில்  சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும், ரோட்டோரத்தில் உள்ள தள்ளுவண்டிக் கடைகளில், கம்மங்கூழை இன்றைய இளம் தலைமுறையினர் ரசித்து ருசித்து குடிப்பதை நாம் பார்த்திருப்போம். நாம் எப்போதாவது குடிக்கும் இந்த கம்மங்கூழ் ஒரு காலத்தில் நமது கிராமங்களின் பிரதான உணவாக இருந்தது. குறிப்பாக விவசாயிகளின் தவிர்க்க முடியாத உணவாக கம்பு விளங்கியிருக்கிறது.


  கம்பு கணக்கிலடங்கா மருத்துவ பயன்களை மனிதனுக்கு தருகிறது. கனிமம், கால்சியம், புரதம், இரும்புச்சத்து என பல வகையான சத்துக்களை கொண்டது. இதை கம்பு சோறு, கம்மங்கூழ், கம்மங்களி, கம்பு தோசை, வெள்ளம் மற்றும் கருப்பட்டி கலந்து கம்பினால் செய்த பலகாரங்கள் என்று எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். தினமும் காலையில் கம்பால் செய்த உணவுகளை சாப்பிட்டால் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து நம் உடல் நலத்தை காக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசிக்கு பதிலாக கம்பு சோறு, கம்மங்கூழ் போன்றவற்றை சாப்பிடலாம். கம்பைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறுகின்றது. நமது குழந்தைகளுக்கு கம்பால் செய்த பலகாரங்களையும், உணவுகளையும் கொடுப்பதால் அவர்கள் ஆரோக்கியம் மேம்படும். செரிமான பிரச்சனையை நீக்கவும், உடல் எடையை சீராக வைப்பதற்கும் கம்பு உதவுகிறது. மோசமான உணவுகளால் குடல் புற்று சமீப காலமாக அதிகம் காணப்படுகிறது. கம்பு சார்ந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் புற்று வருவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெயில் காலங்களிலும், உடல் வெப்பத்தினால் அவதிப்படுவோர்களும் கம்பைத்   தாராளமாக நிறைய எடுத்துக் கொள்ளலாம்.  அதனால் நாம் " சிறுதானியங்களின் அரசன் கம்பு " என்று அழைக்கும் அளவுக்கு மனிதனுக்கு ஏராளமான பயன்களைத் தருகிறது.



    நமது  முன்னோர்கள் அதிக சத்துக்களைக் கொண்ட உணவுகளையே தேர்ந்தெடுத்து " உணவே மருந்து " என்ற அடிப்படையில்  தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியிருக்கின்றனர். கம்பு போன்ற மிகச் சிறப்பான சிறுதானியங்களை பயன்படுத்தியதால் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களாகவும், உடல் வலிமை பெற்றவர்களாகவும் விளங்கியிருக்கின்றனர் அக்காலத்தில். நாமும் நமது முன்னோர்களாகிய பழந்தமிழர்களைப் பின்பற்றி கம்பு போன்ற அதிக நன்மை செய்யும் சிறுதானியங்களை அன்றாட வாழ்வில் உபயோகித்து அதிக பலன்களைப் பெற்றிடுவோம்.

Friday, 10 April 2020

நெய் எனும் அமிர்தம்


     சைவ மற்றும் அசைவ உணவு உண்ணும் இரண்டு வகை மனிதர்களுக்கும் பிடித்தமானது நெய். தென்னிந்தியாவில் நெய் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். நெய்யின் வரலாறு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையுடையது. நமது கலாச்சார உணவுகளிலும், இனிப்பு வகைகளிலும் நெய் இரண்டறக் கலந்துள்ளது. தவிர்க்க முடியாதது. அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெய்யால் செய்த உணவுகளையும், பாரம்பரிய இனிப்பு வகைகளையும் விரும்பி உண்கின்றனர். இந்தியாவில் நெய்யின் பயன்பாடு அதிகம். 



     நெய்யில் நமது உடலுக்கு தேவையான மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளது.நெய் நரம்புகளை, எலும்புகளை வலிமையாக்கும். தொடர்ச்சியாய் நெய் உபயோகிப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்திற்கும், உடல் பருமனை சீர்படுத்துவதற்கும் நல்லது. நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதால், உடலில் இருக்கும் தேவை இல்லாத கொழுப்புகளை கரைத்து, கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. நெய்யில் புரதச் சத்து அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலுக்கு கொடுக்கின்றது. தென்னிந்தியாவில் குழந்தைகளுக்கு பருப்பு சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட கொடுப்பது எல்லார் வீட்டிலும் அன்றாடம் நாம் பார்க்கும் ஒரு காட்சியாகும். மணம் வீசும் நெய்யால் செய்த இனிப்புகளும், பலகாரங்களும், அதன் அலாதி சுவையால் நம் நாவை அடிமையாக்கிவிடும்.

    இன்று சுத்தமான நெய் கலந்து செய்யப்படும் சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு, சமீப காலமாக அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். தற்போது சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்கள் நெய் கலந்த சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இவ்வாறு பல வழிகளில் நெய் நமக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதால் அன்றாட வாழ்வில் அதை உபயோகித்து ஆரோக்கியத்தை மேம்பட செய்திடுவோம். 

Tuesday, 7 April 2020

பழந்தமிழர்களின் வாழ்வில் தினை 

     சிறுதானியங்களில் மிக முக்கியமான உணவு தினை. இது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்ட ஒரு உணவு. இந்தியா தினை உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடான சீனா தினை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. தமிழ் சங்க இலக்கியங்களில் தினை குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக நாம் அறிய முடியும். இதன் மூலம் தினை பழந்தமிழர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது என்பதை நாம் வரலாற்றின் மூலம் அறிகின்றோம்.



    தினையில் அளவற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. தினை நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவாகும். வயிறு, குடல், கணையம் ஆகிய உறுப்புகளை இது வலிமையாக்கும். நம் தசைகள் மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. கால்சியம் சத்துக்களை கொண்டிருப்பதால் எலும்புகளுக்கும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு இது. நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். கொழுப்பு சத்து இல்லாத உணவு என்பதால் தினை அனைவர்க்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.

     உலகிலேயே அதிகமாக பயிரிடப்படும் தானிய வகைகளில் தினை இரண்டாம் இடத்தை பிடிக்கின்றது. இதன் மூலம் தினையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். தமிழ்க் கடவுளான முருகனுக்கு தினை மிக பிடித்தமான உணவு என்பதை புராணங்கள் குறிப்பிடுகின்றது. பழந்தமிழர்களின் அன்றாட வாழ்வில் தினையால் செய்த உணவுகளும், பலகாரங்களும் முக்கிய இடத்தை பிடித்திருந்தது என்பதை நாம் வரலாற்று சான்றுகளின் மூலம் அறிகின்றோம். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த தினையை நம் அன்றாட வாழ்வில் உபயோகித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திடுவோம்.




Friday, 27 March 2020

   இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்கள் 


             இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்பங்களின்  வளர்ச்சி அனைத்து துறைகளிலும் உச்சம் பெற்றுள்ளன.  மனித இனம் கற்பனை செய்து பார்க்க முடியாத வசதிகளை பெற்றுள்ளது இன்று. இந்தியாவை விட பல மடங்கு முன்னேறியுள்ள மேலை நாடுகளில் கூட தமிழர்களின் கலாச்சாரங்களையும், உணவு முறைகளையும் வியந்து பார்க்கின்றனர். நமது முன்னோர்களின் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்கை முறை தான் இதற்கு முக்கிய கரணம் ஆகும்.



      நமது முன்னோர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, வேப்பங்குச்சியால் பல் துலக்கி, ஒரு செம்பு மண்பானைத் தண்ணீர் குடித்து, காலை கடன்களை முடித்து, தான் வளர்க்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் மற்றும் உணவளித்து, வீட்டுத் தேவைக்கு மாட்டிலிருந்து பால் கறந்து, கம்பங்கூழ் அல்லது கேழ்வரகுக் கூழோ குடித்து, தங்களுடைய விவசாய வேலைகளைப் பார்க்க  சென்று விடுவார்கள். அயராது உழைப்பதற்கும், சுறுசுறுப்பிற்கும் பழந்தமிழர்கள் பெயர் பெற்றவர்கள்.

            நமது முன்னோர்கள் இயற்கையாக கிடைத்ததை மட்டுமே மண்ணுக்கு  உரமாக்கி விவசாயம் செய்தனர் அக்காலத்தில். அதனால் அம்மண்ணிலிருந்து அவர்களுக்கு கிடைத்த தானியங்களும், காய்கறிகளும், அளவில்லாத ஆரோக்கியத்தை கொடுத்தன. பழந்தமிழர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரங்களை நடுதல், மாட்டுச்சாணத்தை வைத்து வீட்டையும், முற்றத்தையும் சுத்தப்படுத்துதல், கிருமி நாசினியாக மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்தல், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து சுத்தமான மஞ்சள் அரைத்து குளித்தல், கருப்பட்டி, துளசி, இஞ்சி கலந்து கருப்பட்டி காபி குடித்தல், குழந்தைகளுக்கு சுகாதாரமான பசும்பால் கொடுத்தல், அதிக சத்துள்ள சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது போன்ற நல்ல வாழ்கை முறைகளோடு, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காரணத்தால் உடல் வலிமையும், அதிக நோய் எதிர்ப்பு சக்தியும் பெற்றுறிருந்தனர்.



      இவ்வளவு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உச்சம் பெற்றிருக்கும் காலத்தில் கூட மனித இனத்தை கொரோனா வைரஸ், சார்ஸ் வைரஸ், நிபா வைரஸ் என்று பல விதமான வைரஸ்கள் பயந்து நடுங்க வைக்கின்றன. அன்றைய காலகட்டத்திலும் மோசமான வைரஸ்களும், அச்சுறுத்தும் பாக்டீரியாக்களும் இருக்கவே செய்தன. ஆனால் நமது முன்னோர்களின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், உடலை ஆரோக்கியமாக வைத்திருந்ததுடன் மட்டுமல்லாமல் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிருந்தனர் அக்காலத்தில்.

           இவ்வளவு சிறப்பான வாழ்வியல் முறைகளையும், ''உணவே மருந்து'' எனும் உணவுப் பழக்கங்களையும் பின்பற்றியதால் தான் நாம் மட்டுமல்ல, மேலை நாட்டினரும், உலகிற்கே எடுத்துக்காட்டாகவும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்களையும் பற்றி வியந்து போற்றுகின்றனர்.

Wednesday, 25 March 2020

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் நிலக்கடலை


         இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் விரும்பி உண்ணும் இயற்கையின் கொடை நிலக்கடலை. பூமியில் நிலக்கடலையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளையுடையது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவராலும் விரும்பி உண்ணப்படுவது இது.

        இதன் உபயோகம் மற்றும் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம். நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பைத் தருகிறது. நிலக்கடலையில் உள்ள "பலிபீனால்" என்ற "ஆன்டிஆக்ஸிடென்ட் " அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நம் மிகவும் சத்தானவை என நினைக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை  விட இது அதிக சத்துமிக்க உணவுப்பொருளாகும். இதிலுள்ள சத்துக்கள் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. ஞாபக சக்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.




    உலகின் சத்தான உணவுப் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது நிலக்கடலை. அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப்   பொருட்களின் பட்டியலில் கடலை முக்கிய இடம் பிடித்துள்ளது. நமக்கு எளிதாகக் கிடைப்பதால் இதை அலட்சியம் செய்கின்றோம். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்பது முற்றிலும் தவறானது. நமது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் கடலையில் உள்ளது.

         கடலையுடன் வெல்லம் மற்றும் கருப்பட்டி சேர்த்துச் செய்த பலகாரங்கள் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். தமிழகத்தில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் இந்திய அளவில் புகழ் பெற்றவை.

   நிலக்கடலையில் நார்ச்சத்து, ப்ரோடீன், வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து, போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்துசத்துகளும் நிறைந்துள்ளது. இவ்வாறான மருத்துவ பயன்களையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் நிலக்கடலையை அன்றாட வாழ்வில் அனைவரும் சாப்பிட்டு நமது ஆரோக்யத்தைக் காப்போம்.

Thursday, 27 February 2020

தமிழர்களின் வாழ்வில் கருப்பட்டி 

        "உணவேமருந்து" என்று வாழ்ந்த நம் முன்னோர்களின் காலத்தில் அவர்களின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று கருப்பட்டி. சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் நமது கிராமங்களில் "கருப்பட்டி காபி", கருப்பட்டியினால் செய்த பலகாரங்கள் மணம் வீசியது. மாறிவரும் சூழ்நிலைகளின் காரணமாக வெள்ளைசர்க்கரை பயன்பாட்டிற்கு வர, கருப்பட்டி மெல்ல மெல்ல மக்களால் மறக்கப்பட்டது. நாம் கருப்பட்டியை மறந்ததன் விளைவாக தற்போது 20, 30 வயதுகளிலேயே சர்க்கரை வியாதியின் [நீரிழிவு நோய்]  பயத்துடனே மக்கள் வாழ்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சர்க்கரை நோயால் [type 2] பாதிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை நாம் கடைபிடிக்காததன் விளைவுகளே.

        கறுப்பு நிறத்தில் கட்டியாக இருப்பதால் நம் முன்னோர்கள் "கருப்புக்கட்டி" என்று அழைத்தனர். அதுவே பேச்சு வழக்கில் தற்போது "கருப்பட்டி" யாக ஆகிவிட்டது. கருப்பட்டி மனிதர்களுக்கு கொடுக்கும் ஆரோக்கியமான பயன்கள் அளவிட முடியாதவை. சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

                           கருப்பட்டியும் உளுந்தும் கலந்து களி செய்து சாப்பிட்டால் நமது உடல் வெப்பம் குறைந்து உடல் வலிமைடையும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியை வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். காபியில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி கலந்து குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். இதில் சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்புசக்தியும் அதிகமாக உள்ளது. ரத்தத்தில் "ஹுமோக்ளோபின்" அளவு குறைவுபட்டிருந்தால் கருப்பட்டி சாப்பிட ஹுமோக்ளோபின் அளவு அதிகரிக்கும்.

             கருப்பட்டி தமிழர்களின் அன்றாட வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அளவில்லா மருத்துவ குணங்கள் கொண்ட கருப்பட்டியை நமது அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படச்செய்வது நமது பொறுப்பாகும். 


Tuesday, 4 February 2020

பெரு நன்மை செய்யும் சிறு தானியங்கள்

நம் வாழ்வில் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் கிராமிய விளைப்பொருட்களே சிறுதானியங்கள் அல்லது நவதானியங்கள் என அழைக்கப்படுகிறது. கம்பு, திணை, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை, சோளம், வரகு இவைகளே சிறுதானியங்கள் (Millet). சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பெரும்பங்கு வகித்தது என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடியும்.



மரபு வழி உணவு வகைகளில், நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கிராமங்களில் 80, 90 வயது கடந்தவர்கள் இன்றும் ஆரோக்கியமாக வாழ, இச்சிறுதானிய உணவு வகைகளே காரணமாகும்.

இவ்வளவு சிறப்புகளுடைய சிறு தானிய உணவு வகைகளை நம் வாழ்வில் இருந்து ஒதுக்கிவிட்டு மேலை நாடுகளின் உணவு பழக்கங்களுக்கு அடிமையானதே இன்றைய தலைமுறையினரின் ஆரோக்கியமற்ற வாழ்வுக்குக் காரணம். சமீப காலங்களில் சிறு தானியங்களுக்கு அதிக மவுசு உருவாகியுள்ளது. மேலை நாடுகளின் உணவுகள் மீதான மோகம் நம் மக்களுக்குக் குறையத் தொடங்கியுள்ளது.

சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில் சிறுதானியங்களோடு கருப்பட்டி, வெல்லம் கலந்து தின்பண்டங்கள் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பது ஒரு அன்றாட நிகழ்வு. இதிலிருந்து பழந்தமிழர் வாழ்வில் சிறுதானியங்கள் ஓர் முக்கிய இடத்தைப் பிடித்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் பல பள்ளிகளில் சிறு தானியங்களால் செய்யப்பட்ட பலகாரங்களை உணவு இடை வேலையின் போது கொண்டுவந்து சாப்பிடுமாறு குழந்தைகள் அறிவுறுத்தப்படுவது மிகப் பெரிய மாற்றமே

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடல் நலத்துக்கு ஆரோக்கியம் தரும் சிறு தானிய உணவுகள், உணவுப்பொருட்கள், பலகாரங்கள் ஆகியவற்றை நாம் உண்டு இதை அடுத்த தலைமுறையினருக்கும் அறிமுகம் செய்வது நமது கடமையாகும்.