தமிழர்களின் வாழ்வில் கருப்பட்டி
"உணவேமருந்து" என்று வாழ்ந்த நம் முன்னோர்களின் காலத்தில் அவர்களின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று கருப்பட்டி. சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் நமது கிராமங்களில் "கருப்பட்டி காபி", கருப்பட்டியினால் செய்த பலகாரங்கள் மணம் வீசியது. மாறிவரும் சூழ்நிலைகளின் காரணமாக வெள்ளைசர்க்கரை பயன்பாட்டிற்கு வர, கருப்பட்டி மெல்ல மெல்ல மக்களால் மறக்கப்பட்டது. நாம் கருப்பட்டியை மறந்ததன் விளைவாக தற்போது 20, 30 வயதுகளிலேயே சர்க்கரை வியாதியின் [நீரிழிவு நோய்] பயத்துடனே மக்கள் வாழ்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சர்க்கரை நோயால் [type 2] பாதிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை நாம் கடைபிடிக்காததன் விளைவுகளே.
கறுப்பு நிறத்தில் கட்டியாக இருப்பதால் நம் முன்னோர்கள் "கருப்புக்கட்டி" என்று அழைத்தனர். அதுவே பேச்சு வழக்கில் தற்போது "கருப்பட்டி" யாக ஆகிவிட்டது. கருப்பட்டி மனிதர்களுக்கு கொடுக்கும் ஆரோக்கியமான பயன்கள் அளவிட முடியாதவை. சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
கருப்பட்டியும் உளுந்தும் கலந்து களி செய்து சாப்பிட்டால் நமது உடல் வெப்பம் குறைந்து உடல் வலிமைடையும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியை வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். காபியில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி கலந்து குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். இதில் சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்புசக்தியும் அதிகமாக உள்ளது. ரத்தத்தில் "ஹுமோக்ளோபின்" அளவு குறைவுபட்டிருந்தால் கருப்பட்டி சாப்பிட ஹுமோக்ளோபின் அளவு அதிகரிக்கும்.
கருப்பட்டி தமிழர்களின் அன்றாட வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அளவில்லா மருத்துவ குணங்கள் கொண்ட கருப்பட்டியை நமது அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படச்செய்வது நமது பொறுப்பாகும்.

No comments:
Post a Comment