மணம் வீசும்
ஏலக்காய்
ஏலக்காய் நாம்
அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்று. இவ்வுலகில் நான்காயிரம் வருடங்களுக்கு மேலாக
ஏலக்காய் பயன்பாட்டில் உள்ளது. நமது இந்தியா தான் ஏலக்காயின் பூர்வீகம் ஆகும்.
இந்தியாவில் கேரளா, கர்நாடகா மற்றும்
தமிழ்நாடு ஏலக்காய் அதிகமாக பயிரிடப்படும் மாநிலங்கள் ஆகும். உலக அளவில் இந்தியா,
இலங்கை, நேபாளம், பூட்டான், தாய்லாந்து, தான்சானியா, வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகள் ஏலக்காய் உற்பத்தியில்
முன்னனியில் உள்ள நாடுகள். இந்தியாவில் சைவ, அசைவ உணவுகள், பாரம்பரிய இனிப்பு வகைகள், தேனீர் முதலியவற்றில் ஏலக்காய் பயன்பாடு மிக
அதிகம். பழங்காலத்தில் ஏலக்காயை நறுமணத்திற்காக மட்டுமல்லாமல் அது தரும் மருத்துவ
பயன்பாட்டிற்காகவும் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஏலக்காயை எதாவது
ஒரு வழியில் உணவில் எடுத்துக் கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். அஜீரணக் கோளாறுகளை
சரி பண்ணி செரிமானத்திற்கு உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நமது உடலில்
தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கிறது. ரத்த
அழுத்தத்தை குறைக்க ஏலக்காய் உதவுகிறது. ஏலக்காயை தேனீரில் கலந்து குடிப்பதனால்
மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். ஏலக்காய் இருமல் மற்றும் ஆஸ்துமா
ஆகியவற்றை தடுக்கிறது. நமது வாயில் உள்ள மோசமான கிருமிகளை போக்குவதில் ஏலக்காய்
முக்கிய பங்கு ஆற்றுகிறது. புற்று நோய் செல்களை தடுத்து புற்று நோய் வராமல்
தடுக்கிறது.
இவ்வளவு மருத்துவ
குணங்கள் நிறைந்துள்ளதால் ஏலக்காய் பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை நமது
உணவுக் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. நம்மால் மறக்க முடியாத நமது
பாரம்பரிய இனிப்பு வகைகள் அனைத்திலும் ஏலக்காய் தவறாது இடம் பெற்றிருக்கும். மிகச்
சிறப்பானவற்றை தேடிப்பிடித்து உணவுப் பழக்கத்தில் சேர்ப்பது நமது முன்னோர்களின்
வாடிக்கை ஆகும். அதனால் தான் ஏலக்காயும், நமது முன்னோர்களைப் போல பல ஆயிரம் வருடங்கள் கடந்தும், நம்முடைய உணவுப் பழக்கத்திலும், பாரம்பரிய இனிப்பு வகைகளிலும் மணம் வீசி நமக்கு
ஏராளமான நன்மைகளைக் கொடுக்கின்றது.
