Thursday, 16 April 2020

நலம் தரும் எள்ளு 

        எள் என்ற வார்த்தையே வழக்குச் சொல்லாக எள்ளு என்று அழைக்கப்படுகிறது. எள்ளு தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. இது சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடைய தானிய விதை அகும். எள்ளு பெரும்பாலும் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டது. இதில் அனைவராலும் பரவலாக அறியப்படுவது கருப்பு எள்ளு ஆகும். இந்தியா, மியான்மர், தான்சானியா, சூடான் போன்ற நாடுகளில் எள்ளு அதிகம் பயிரிடப்படுகிறது. எள்ளால் செய்த பலகாரங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை மற்றும் கோவை போன்ற ஊர்களில் எள்ளால் செய்த பலகாரங்கள் உற்பத்தி நடைபெறுகின்றது. தமிழர்கள் அனைவரும் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் நல்லெண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். தமிழ்க்  கலாசாரத்தில் பெரும்பாலான வீடுகளில் தலைக்கும், உடம்பிற்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது. இதன் மூலம் எள்ளு நமது வாழ்வில் பலகாரங்களாக, எண்ணெயாக பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.




             எள்ளின் மருத்துவ பயன்கள் ஏராளமானது. கல்லீரலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை சுத்தம் செய்கிறது. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் எள்ளை தொடர்ந்து சாப்பிட்டால் அந்தக் கோளாறு நீங்கும். எள்ளு புற்று நோய் செல்களை வளர விடாமல் பார்த்து கொள்கிறது. அதனால் குடல் புற்று, கல்லீரல் புற்று வராமல் தடுக்கப்படுகிறது. எள்ளில் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் பி, ஈ மற்றும் இரும்புச் சத்தும் ஏராளமாக உள்ளது. இதனால் பழங்காலத்தில் வீடுகளில் எள்ளால் செய்த பலகாரங்களை தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அதனால் இதை சாப்பிடும் குழந்தைகள் அனைவரும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். எள்ளின் பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மணம் வீசும் எள்ளால் செய்த பலகாரங்கள் அனைத்தும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும்  மிக பிடித்தமான ஒன்றாகும்.

       இவ்வளவு மருத்துவ குணங்கள் எள்ளில் நிறைந்துள்ளதால் நமது முன்னோர்கள் அதை பலகாரங்களாக, எள்ளுருண்டையாக, இனிப்பு வகைகளாக, எண்ணெய்யாக  தமது வாழ்வில் தொடர்ச்சியாக அதை பயன்படுத்தியிருக்கின்றனர். இன்றைய தலைமுறையினர் நமது முன்னோர்களின் உணவுப் பழக்கங்களையும், பலகார வகைகளையும் அறிந்து அவர்களைப் பின்பற்ற நினைப்பது நாம் அனைவரும் பெருமைப்படத்தக்க விஷயமாகும்.


சிறுதானியங்களின் அரசன் கம்பு 

 கம்பு சிறுதானியங்களில் அதிகமாக பயிரிடப்படுவது ஆகும். தமிழகத்திலும், இந்திய அளவிலும் மக்களால்  அதிகமாக அறியப்பட்ட சிறுதானியம் ஆகும். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு பயிரிடப்படுகிறது. நமது இந்திய மக்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கம்பு உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெயில் அதிகமாக உள்ள காலங்களில்  சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும், ரோட்டோரத்தில் உள்ள தள்ளுவண்டிக் கடைகளில், கம்மங்கூழை இன்றைய இளம் தலைமுறையினர் ரசித்து ருசித்து குடிப்பதை நாம் பார்த்திருப்போம். நாம் எப்போதாவது குடிக்கும் இந்த கம்மங்கூழ் ஒரு காலத்தில் நமது கிராமங்களின் பிரதான உணவாக இருந்தது. குறிப்பாக விவசாயிகளின் தவிர்க்க முடியாத உணவாக கம்பு விளங்கியிருக்கிறது.


  கம்பு கணக்கிலடங்கா மருத்துவ பயன்களை மனிதனுக்கு தருகிறது. கனிமம், கால்சியம், புரதம், இரும்புச்சத்து என பல வகையான சத்துக்களை கொண்டது. இதை கம்பு சோறு, கம்மங்கூழ், கம்மங்களி, கம்பு தோசை, வெள்ளம் மற்றும் கருப்பட்டி கலந்து கம்பினால் செய்த பலகாரங்கள் என்று எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். தினமும் காலையில் கம்பால் செய்த உணவுகளை சாப்பிட்டால் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து நம் உடல் நலத்தை காக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசிக்கு பதிலாக கம்பு சோறு, கம்மங்கூழ் போன்றவற்றை சாப்பிடலாம். கம்பைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறுகின்றது. நமது குழந்தைகளுக்கு கம்பால் செய்த பலகாரங்களையும், உணவுகளையும் கொடுப்பதால் அவர்கள் ஆரோக்கியம் மேம்படும். செரிமான பிரச்சனையை நீக்கவும், உடல் எடையை சீராக வைப்பதற்கும் கம்பு உதவுகிறது. மோசமான உணவுகளால் குடல் புற்று சமீப காலமாக அதிகம் காணப்படுகிறது. கம்பு சார்ந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் புற்று வருவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெயில் காலங்களிலும், உடல் வெப்பத்தினால் அவதிப்படுவோர்களும் கம்பைத்   தாராளமாக நிறைய எடுத்துக் கொள்ளலாம்.  அதனால் நாம் " சிறுதானியங்களின் அரசன் கம்பு " என்று அழைக்கும் அளவுக்கு மனிதனுக்கு ஏராளமான பயன்களைத் தருகிறது.



    நமது  முன்னோர்கள் அதிக சத்துக்களைக் கொண்ட உணவுகளையே தேர்ந்தெடுத்து " உணவே மருந்து " என்ற அடிப்படையில்  தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியிருக்கின்றனர். கம்பு போன்ற மிகச் சிறப்பான சிறுதானியங்களை பயன்படுத்தியதால் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களாகவும், உடல் வலிமை பெற்றவர்களாகவும் விளங்கியிருக்கின்றனர் அக்காலத்தில். நாமும் நமது முன்னோர்களாகிய பழந்தமிழர்களைப் பின்பற்றி கம்பு போன்ற அதிக நன்மை செய்யும் சிறுதானியங்களை அன்றாட வாழ்வில் உபயோகித்து அதிக பலன்களைப் பெற்றிடுவோம்.

Friday, 10 April 2020

நெய் எனும் அமிர்தம்


     சைவ மற்றும் அசைவ உணவு உண்ணும் இரண்டு வகை மனிதர்களுக்கும் பிடித்தமானது நெய். தென்னிந்தியாவில் நெய் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். நெய்யின் வரலாறு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையுடையது. நமது கலாச்சார உணவுகளிலும், இனிப்பு வகைகளிலும் நெய் இரண்டறக் கலந்துள்ளது. தவிர்க்க முடியாதது. அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெய்யால் செய்த உணவுகளையும், பாரம்பரிய இனிப்பு வகைகளையும் விரும்பி உண்கின்றனர். இந்தியாவில் நெய்யின் பயன்பாடு அதிகம். 



     நெய்யில் நமது உடலுக்கு தேவையான மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளது.நெய் நரம்புகளை, எலும்புகளை வலிமையாக்கும். தொடர்ச்சியாய் நெய் உபயோகிப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்திற்கும், உடல் பருமனை சீர்படுத்துவதற்கும் நல்லது. நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதால், உடலில் இருக்கும் தேவை இல்லாத கொழுப்புகளை கரைத்து, கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. நெய்யில் புரதச் சத்து அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலுக்கு கொடுக்கின்றது. தென்னிந்தியாவில் குழந்தைகளுக்கு பருப்பு சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட கொடுப்பது எல்லார் வீட்டிலும் அன்றாடம் நாம் பார்க்கும் ஒரு காட்சியாகும். மணம் வீசும் நெய்யால் செய்த இனிப்புகளும், பலகாரங்களும், அதன் அலாதி சுவையால் நம் நாவை அடிமையாக்கிவிடும்.

    இன்று சுத்தமான நெய் கலந்து செய்யப்படும் சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு, சமீப காலமாக அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். தற்போது சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்கள் நெய் கலந்த சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இவ்வாறு பல வழிகளில் நெய் நமக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதால் அன்றாட வாழ்வில் அதை உபயோகித்து ஆரோக்கியத்தை மேம்பட செய்திடுவோம். 

Tuesday, 7 April 2020

பழந்தமிழர்களின் வாழ்வில் தினை 

     சிறுதானியங்களில் மிக முக்கியமான உணவு தினை. இது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்ட ஒரு உணவு. இந்தியா தினை உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடான சீனா தினை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. தமிழ் சங்க இலக்கியங்களில் தினை குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக நாம் அறிய முடியும். இதன் மூலம் தினை பழந்தமிழர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது என்பதை நாம் வரலாற்றின் மூலம் அறிகின்றோம்.



    தினையில் அளவற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. தினை நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவாகும். வயிறு, குடல், கணையம் ஆகிய உறுப்புகளை இது வலிமையாக்கும். நம் தசைகள் மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. கால்சியம் சத்துக்களை கொண்டிருப்பதால் எலும்புகளுக்கும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு இது. நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். கொழுப்பு சத்து இல்லாத உணவு என்பதால் தினை அனைவர்க்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.

     உலகிலேயே அதிகமாக பயிரிடப்படும் தானிய வகைகளில் தினை இரண்டாம் இடத்தை பிடிக்கின்றது. இதன் மூலம் தினையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். தமிழ்க் கடவுளான முருகனுக்கு தினை மிக பிடித்தமான உணவு என்பதை புராணங்கள் குறிப்பிடுகின்றது. பழந்தமிழர்களின் அன்றாட வாழ்வில் தினையால் செய்த உணவுகளும், பலகாரங்களும் முக்கிய இடத்தை பிடித்திருந்தது என்பதை நாம் வரலாற்று சான்றுகளின் மூலம் அறிகின்றோம். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த தினையை நம் அன்றாட வாழ்வில் உபயோகித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திடுவோம்.