பழந்தமிழர்களின் வாழ்வில் தினை
சிறுதானியங்களில் மிக முக்கியமான உணவு தினை. இது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்ட ஒரு உணவு. இந்தியா தினை உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடான சீனா தினை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. தமிழ் சங்க இலக்கியங்களில் தினை குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக நாம் அறிய முடியும். இதன் மூலம் தினை பழந்தமிழர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது என்பதை நாம் வரலாற்றின் மூலம் அறிகின்றோம்.
தினையில் அளவற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. தினை நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவாகும். வயிறு, குடல், கணையம் ஆகிய உறுப்புகளை இது வலிமையாக்கும். நம் தசைகள் மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. கால்சியம் சத்துக்களை கொண்டிருப்பதால் எலும்புகளுக்கும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு இது. நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். கொழுப்பு சத்து இல்லாத உணவு என்பதால் தினை அனைவர்க்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.
உலகிலேயே அதிகமாக பயிரிடப்படும் தானிய வகைகளில் தினை இரண்டாம் இடத்தை பிடிக்கின்றது. இதன் மூலம் தினையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். தமிழ்க் கடவுளான முருகனுக்கு தினை மிக பிடித்தமான உணவு என்பதை புராணங்கள் குறிப்பிடுகின்றது. பழந்தமிழர்களின் அன்றாட வாழ்வில் தினையால் செய்த உணவுகளும், பலகாரங்களும் முக்கிய இடத்தை பிடித்திருந்தது என்பதை நாம் வரலாற்று சான்றுகளின் மூலம் அறிகின்றோம். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த தினையை நம் அன்றாட வாழ்வில் உபயோகித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திடுவோம்.

No comments:
Post a Comment