Monday, 4 May 2020


தவிர்க்க முடியாத சிறுதானியம் கேழ்வரகு

     நாம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட சிறுதானியம் கேழ்வரகு ஆகும். இதை தெலுங்கில் ராகி என்றும், தென் தமிழ்நாட்டில் கேப்பை என்றும் அழைப்பார்கள். கேழ்வரகு தென்னிந்தியாவில் தோன்றியது என்றும், ஆப்பிரிக்கா மற்றும் எத்தியோப்பியாவில் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது மக்களின் அன்றாட வாழ்வில் மிக நெருக்கமான சிறுதானியம் கேழ்வரகு ஆகும். மக்கள் இதை கேழ்வரகுக்  கூழ், கேழ்வரகுக்  களி, கேழ்வரகு தோசை, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு பலகாரங்கள் என்று பல வழிகளில் சாப்பிடுகின்றனர். இந்தியாவில் தமிழகமும், கர்நாடகாவும் கேழ்வரகு அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலங்கள். கேழ்வரகு மனிதர்களுக்கு அளவற்ற ஆரோக்கிய பயன்களைத் தருகிறது.



     கேழ்வரகு வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. தமிழகத்தில் வெயில் காலங்களில் கேழ்வரகுக் கூழ் விற்கும்  தள்ளு வண்டி கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று கேழ்வரகுக் கூழை குடிப்பதை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். நம் தாத்தா பாட்டி காலத்தில் கிராமங்களில் மதிய வேளையில் கேழ்வரகுக் கூழை அதிகமாக குடிப்பார்கள். இதனால் அவர்கள் 80, 90 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். கேழ்வரகு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கேழ்வரகில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு இதை நாம் கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கேழ்வரகு நார்ச்சத்து அதிகமாக இருக்கும் சிறுதானியம் ஆகும். கெட்ட கொழுப்புகளை  கரைத்து உடல் எடையை சீராக வைப்பதற்கு உதவுகிறது. கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலிமை பெறவும் உதவுகிறது. நமது உடலில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

  கேழ்வரகில் அளவற்ற சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளதால் நமது முன்னோர்களின் வாழ்விலும், இன்றைய தலைமுறையிலும் அது தவிர்க்க முடியாத சிறுதானியமாக திகழ்ந்து நமக்கு நிறைய நன்மைகளைக் கொடுத்து ஆரோக்கியத்தை காத்து கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment